Sunday, February 26, 2012

பேஸ்புக் படங்கள் உங்கள் குரலில் பேசினால்;புதுமையான இணைய சேவை
பேசும் புகைப்படங்கள்,பேசும் விடியோக்கள்,பேசும் குறும்பதிவுகள் என இணையத்தில் எல்லாமே பேசினால் எப்படி இருக்கும்?புதிய இணைய சேவையான கிவிப்ஸ் இதை தான் சாத்தியமாக்குகிறது.
பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படமோ டிவிட்டரில் வெளியிடப்படும் தகவலோ இனி உங்கள் குரல் அறிமுகத்தோடு நண்பர்களை சென்றடையும்.உபயம் கிவிப்ஸ்.
இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் எந்த விஷயத்துடனும் ஒலி குறிப்புகளை,அதிலும் உங்கள் குரல் பதிவை இணைத்து அனுப்ப கிவிப்ஸ் வழி செய்கிறது.அதாவது புகைப்படம் அல்லது குறும்பதிவு போன்றவற்றோடு 30 நிமிட ஒலி பதிவை இணைத்து கொள்ளும் சேவையை கிவிப்ஸ் வழங்குகிறது.
சமூக ஒலியை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் கிவிப்ஸ் ‘கிளிக் செய்யுங்கள் பேசுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று இணைய உரையாடலுக்கு புதிய பரிமானத்தை ஏற்படுத்தி தருகிறது.
இணைய உலகிற்கு மிகவும் தேவையான மேம்பாடகவே கிவிப்ஸ் அறிமுகமாகியுள்ளது எனலாம்.காரணம் இணையத்தில் பெரும்பாலான பகிர்வுகளும் பயன்பாடும் எழுத்து வடிவில் தான் மேற்கொள்ளப்படுகின்றன.எழுத்துக்கு அடுத்த இடத்தில் வீடியோ இருக்கிறது.ஆனால் ஆடியோவை பலரும் கண்டு கொள்வதில்லை.
வலைப்பதிவுக்கு நிகரான ஒலி வடிவ வசதியான பாட்காஸ்டிங் இணைய உலகில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.இசை சார்ந்த தளங்கள் அநேகம் இருந்தாலும் இணைய பயன்பாடு என்று வரும் போது ஆடியோ விரும்பி ஏற்கப்படும் வடிவமாக இருக்கவில்லை.
ஸ்கைப் மற்றும் ஹெட்போன் யுகத்தில் இந்த நிலை கொஞ்சம் விசித்திரமானது தான்.
இதை உணர்ந்தோ என்னவோ கிவிப்ஸ் மூலம் இணைய பரிமாற்றங்களுடன் ஒலியை இணைக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.அதிக சிக்கல் இல்லாமல் மிக எளிதாக மிக அழகாக கிவிப்ஸ் இந்த வசதியை தருகிறது.
கிவிப்சை பயன்படுத்த கம்ப்யூட்டரோடு மைக் இருந்தால் போதும்.அதன் பிறகு பேஸ்புக் பதிவோ ,டிவிட்டர் குறும்பதிவோ இமெயில் செய்தியோ எதுவாக இருந்தாலும் அதனுடன் 30 விநாடி குரல் பதிவை இணைத்து விடலாம்.
இப்படி குரல் பதிவை இணைக்கும் வசதியை பலவிதங்களில் பயன்படுத்தி கொள்ளலாம் .
இவற்றை கோடிட்டு காட்டுவது போல கிவிப்ஸ் இந்த சேவை பயன்படுத்தப்படக்கூடிய வழிகளை பட்டியல் போட்டு காட்டியுள்ளது.
உதாரணத்திற்கு புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் போது அதற்கான விளக்க குறிப்பை கீழே இணைப்பதற்கு பதிலாக அந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்வதற்கான காரணத்தை நீங்களே பேசி அதனை பதிவு செய்து இணைத்து அனுப்பலாம்.அந்த புகைப்படத்தை பெறுபவர்கள் அதில் இணைக்கப்பட்டுள்ள ஒலி குமிழை கிளிக் செய்தால் உங்கள் விளக்கத்தை கேட்டு ரசிக்க முடியும்.
இதே போலவே வீடியோக்களுக்கும் சிறு அறிமுகத்தை நீங்களே வழங்கலாம்.
யோசித்து பாருங்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் போல நீங்களும் கூட வீடியோ காட்சிகளுக்கான வர்ணனையை வழங்கலாம்.
இவ்விதமே டிவிட்டர் குறும்பதிவுகளோடு அதற்கான ஒலி குறிப்பையும் சேர்த்து அனுப்பலாம்.குறும்பதிவில் பகிர்ந்து கொள்ளும் தகவலின் முக்கியத்துவத்தை நச் என நாலு வரியில் நீங்கல் சொல்லலாமே!
இமெயிலிலும் இதே போல உங்கள் குரல் கையெழுத்தை இடம் பெற வைக்கலாம்.
கருத்துக்கள் சொல்லும் போதும் உங்கள் குரல் அடையாளத்தை சேர்த்தே அனுப்பலாம்.
இந்த வசதியை பயன்படுத்தி குரலில் கருத்துக்கலை பதிவுச் எய்வது மிகவும் சுலபமானது தான்.இந்த பதிவுகளை பேஸ்புக் டிவிட்டர் வழியே பகிர்ந்து கொள்வதும் சுலபமானது.
இணையம் பெரும்பாலும் நிசப்தமாகவே இருக்கிறது.அதை சற்றே பேச வைத்திருக்கும் கிவிப்ஸ் சேவை இணையத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றக்கூடியது.அதோடு பரிமாற்றங்களில் உங்களுக்கே உரித்தான தனித்தன்மையையும் சாத்தியமாக்குகிறது.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply