Thursday, January 26, 2012

ட்ரூபால் (Drupal) நிறுவுதல்


ட்ரூபால் நிறுவ முதலில் ட்ருபாலுக்கான ஒரு தரவுதளத்தை (Database) உருவாக்க வேண்டும். இந்த தரவு தளத்தில் தான் ட்ரூபால் நம் தளத்தின் பக்கத்தின் தகவல்களை எல்லாம் சேமித்துவைத்துக்கொள்ளும்.

 ஏற்கெனவே WAMP Server ல் MYSQL சேர்ந்தே நாம் நிறுவியது ஞாபகம் இருக்கலாம். அதை நாம் இங்கே பயன்படுத்த வேண்டும், MYSQL-ல் எல்லா வசதிகள் இருப்பினும் அதை மேலாண்மை செய்வதற்கு கட்டளை இடைமுகம் (Command line Interface) தான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அக்கட்டளைகள் தெரிந்தவர்கள் மட்டுமே அதை மேலாண்மை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் பிறகு அதை எளிது படுத்த வேறு பல மென்பொருட்கள் வந்துவிட்டது. அதில் பிரபலமானது MYSQL ன் mysql-workbench மற்றும் PHPMyAdmin என்பதாகும்.

 நாம் இங்கே PHPMyAdmin ஐ பயன்படுத்த இருக்கிறோம். PHPMyAdmin என்பது MYSQL ஐ மேலாண்மை செய்ய PHP ல் எழுதப்பட்ட மற்றொரு இலவச நிரல் தொகுப்பு. இது WAMP உடனே சேர்ந்து வருவதால் அது ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும. அதை செயல் படுத்த உலாவியில் http://localhost/phpmyadmin/ என்றோ அல்லது HTTP துறை எண்ணை நீங்கள் மாற்றியிருந்தால் http://localhost:8080/phpmyadmin/ என்றோ கொடுத்தால் போதும். (WAMP ஐ முதலில் செயல்படுத்தவும்) அல்லது WAMP ல் இருந்து PhpMyAdmin என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.




 இப்போது PHPMYADMIN பக்கம் காட்சியளிக்கும். இதில் Create new database என்ற பகுதியில் தரவு தளத்தின் பெயரை drupal6 என்றோ அல்லது உங்களுக்கு ஏற்புடைய ஏதாவது ஒரு பெயரை கொடுத்து பக்கத்தில் இருக்கும் CREATE . என்பதை சுட்டினால் போதும்.



 இப்போது தரவு தளம் உருவாக்கப்பட்டது என செய்தி வரும். இப்பக்கத்தை மூடி விடலாம்.


அடுத்து ட்ரூபால் மென்பொருள் தேவை. அதை drupal.org தளத்தில் இருந்து தரையிறக்கம் செய்யலாம்.
 ட்ரூபால் தரையிறக்கும் போது கவனிக்க வேண்டிய  விசயமாவது, தற்போது 4 பதிப்பு வரிசைகளில்  ட்ரூபால் கிடைக்கிறது. அதாவது Drupal 4, Drupal 5, Drupal 6 Drupal 7.
 ட்ரூபால் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால் ஒவ்வொரு பதிப்பிலும் புதிய புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு கொண்டே இருக்கும். Drupal 4 ன் நிரலாக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் அதை புதிதாத பயன்படுத்துவது நல்லதல்ல.

 Drupal 7 பதிப்பு இப்போதுதான் நிரல் எழுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இன்னும் நிறைய மாற்றங்கள் அதில் வரக்கூடும், அதனால் நமக்குள் பயன்படுத்தி பார்க்கலாமே ஒழிய நிஜ தளத்திற்கு பயன்படுத்துவது உசிதமல்ல.
 மேலும் Drupal 7 ல் இப்போதுதான் ஒவ்வொரு நீட்சிகளாக (மாட்யூலாக) வந்த வண்ணம் இருக்கிறது.  அதனால் நமக்கு தேவைப்படும் சில் முக்கிய நீட்சிகள் முழுமையாக ட்ரூபால் 7 ல் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை.
 Drupal-ல் ஒரு பதிப்பில் மற்ற பதிப்பின் நீட்சிகளை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதாவது Drupal 5 க்காக எழுதப்பட்ட நிரல் சில Drupal 6 ல் வேலைசெய்யாமல் போகலாம். இதுவும் ஒரு காரணம்.


 நாம் இங்கு Drupal 6 பதிப்பை பயன்படுத்தலாம். இதன் தற்போதைய கடைசிப்பதிப்பு Drupal 6.17.

 இதை தரையிறக்க உலாவியில் http://drupal.org/project/drupal பக்கத்திற்குச் சென்று Drypal6.17 என்பதின் பக்கத்தில் இருக்கும download என்பதை தெரிவுசெய்து அதை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளவும்.



 அல்லது அதன் நேரடி முகவரி http://ftp.drupal.org/files/projects/drupal-6.17.tar.gz ஆகும். ஒருவேளை நீங்கள இதை படிக்கும் போது drupal 6.18, Drupal 6.19 வந்திருந்தாலும் அதை பயன்படுத்தலாம்.
 ட்ரூபாலில் பல கோப்புகள் இருந்தாலும் அவைகள் அளவுகுறைவாக இருப்பதற்காக சுருக்கப்பட்டு ஒரே கோப்பில் tar.gz  வடிவமாக வைக்கப்பட்டு இருக்கும்.


 இப்போது  சேமித்த கோப்பை தனித்தனி கோப்பாக பிரித்துக்கொள்ளுங்கள் (Extract). இதைச் செய்ய WinRar (http://www.rarlab.com/rar/wrar380.exe) எனும் மென்பொருளை பயன் படுத்தலாம். Winrar ஐ நிறுவி விட்டு அந்த கோப்பின் மீது வலப்புற சுட்டியை right click  பயன்படுத்தி Extract here கொடுத்தால் போதும். இப்போது புதிதாக drupal-6.17 என்ற அடைவு(folder/directory) வந்திருக்கும்.



 அதை Apache இணைய வழங்கியின் இணைய முதன் அடைவில் (Root folder) போடவேண்டும். இணைய முதன் அடைவு நாம் WAMP நிறுவும் போது கொடுத்த அடைவு இடத்தில் இருக்கும் www எனப்படும் அடைவு ஆகும். நிறுவும் போது WAMP -ன் இந்த இடத்தை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே விட்டிருந்தோம் எனில் அது C:\wamp\www என இருக்கும். www  Directory எது    என்பது தெரியவில்லை எனின் Wamp ஐக்கானை தெரிவு செய்து அதில்  www    Directory ஐ தேர்வு செய்யுங்கள்.


 இப்போது தரையிரக்கிய drupal-6.17 என்ற ட்ரூபால் அடைவை தெரிவு செய்து Ctrl + x ஐ அழுத்தி கணினியில் C:\wamp\www இந்த இடத்திற்குச் சென்று ctrl + v அழுத்தினால் போதும். இப்போது அந்த அடைவின் பெயரை எளிதாக இருக்க drupal என மாற்றிக்கொள்ளுங்கள். அதற்கு அந்த அடைவை தெரிவு செய்து F2 அழுத்தி drupal எனவோ அல்லது உங்களுக்கு பிடித்த பெயரையோ கொடுத்துக்கொள்ளலாம்.


 இப்போது அதே அடைவை திறந்து sites/default எனும் அடைவிற்குள் பார்த்தால் default.settings.php எனும் கோப்பு இருக்கக் காணலாம். இதில் ட்ரூபாலின் இயல்பான அமைவுகள் (settings) இருக்கும். இதை settings.php என பெயர் மாற்றம் செய்து கொள்ளவும். அல்லது அதை ஒரு பிரதியெடுத்து புதிய கோப்பை settings.php என பெயர் மாற்றம் செய்யலாம்.

 அடுத்து இணைய உலாவியில் http://localhost/drupal என்று தட்டச்சு செய்யுங்கள். இங்கே drupal என்பது இப்போது தரையிறக்கி நாம் பெயர் மாற்றம் செய்த ட்ரூபாலின் நிரல் அடைவு.

 [ எப்போது localhost போட்டாலும துறை எண் மாற்றியிருந்தால் அந்த எண்ணையும் கொடுத்தாக வேண்டும். உதாரணமாக துறை எண் 8080 எனில் http://localhost:8080/drupal எனவும் 4040 எனில் http://localhost:4040/drupal எனவும் கொடுங்கள். ]


 இப்போது ட்ரூபாலின் நிறுவுதல் (Install) முதல் பக்கம் வரவேண்டும், வரவில்லை எனில் localhost/drupal/install.php என்று தட்டச்சு செய்யுங்கள்.



 

 நிறுவுதல் பக்கத்தில் Install Drupal in English என்பதை தெரிவு செய்யுங்கள்.

 

 இப்போது தரவு தள அமைவுகள் (Data Base configuration) பக்கம் வரும். இதில் நாம் முதலில் உருவாக்கிய தரவு தள விபரங்களை
 கொடுக்க வேண்டியிருக்கும்.




 நாம் PHPMYADMIN மூலம் உருவாக்கிய தரவு தளத்தின் பெயர் drupal6 எனக் கொடுத்திருந்தோம். எனவே Database Name என்பதில் அதையே (drupal6c) கொடுங்கள்.


பயனர் பெயர் root எனக்கொடுங்கள். இது MYSQL ன் இயல்பான முதன்மை பயனர் பெயர் ஆகும்.
 Password ல் எதுவும கொடுக்க வேண்டாம். WAMP இயல்பாக MYSQL க்கு  கடவுச்சொல் கொடுத்திருக்காது.

 [இணையத்தில் வாங்கிய இடத்தில் நாம் நிறுவுவதாக இருந்தால் நாம் தரவு தளம் உருவாக்கும் போது கொடுத்த பெயரை இங்கே கொடுக்க வேண்டும். அதிகமாக தரவு தள பெயரும் அதன் பயனர் பெயரும் ஒன்றாகவே இருக்கும். CPanel வழியாக தரவு தளத்தை உருவாக்கினால், அதிலேயே ஒரு பயனர் பெயரையும் உருவாக்கி அந்தப்பயனருக்கு உருவாக்கிய தரவுதளத்திற்கான அனுமதியை கொடுத்தாக வேண்டும்.]


Advanced options:
 Data Base Host : இதில் localhost  என்பது இயல்பாக இருக்கும். முன்பே கூறியடி localhost  என்பது அதே கணினியின் பெயர். Mysql -ம், இணைய வழங்கி Apache மென்பொருளும் ஒரே கணினியில் இருப்பதால் localhost எனக் கொடுத்தால் போதும். ஒரு வேளை இணையத்தில் வாங்கிய இடத்தில் நாம் நிறுவுவதாக இருந்தால் அந்தந்த இணைய சேவை வழங்குவோரைப் பொறுத்து இது வேறுபடும். உதாரணமாக secureserver.net (godaddy.com) தளத்தில் இடம் வாங்கியிருந்தால் நீங்கள் அவர்கள் தந்த இடைமுகத்தின் மூலம் தரவு தளம் உருவாக்கியவுடன் அதன் விபரப்பக்கத்தில் சென்றால் தரவு தள கணினியின் பெயர் இருக்கும். அதை பயன்படுத்த வேண்டும். தெரியவில்லை எனில் அவர்களின் உதவி சேவையை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளவும்.


 Prefix: இயல்பாக ஒரு தரவு தளத்திற்கு ஒரு ட்ரூபால் என்ற ரீதியில் நிறுவப்படும். சில நேரங்கலில் ஒரே தரவு தளத்திலேயே பல Drupal நிறுவ வேண்டும் என்றால் Table prefix: என்ற இடத்தில் அட்டவணைகளுக்கான (Table) ஏதாவது முன்னொட்டை sitename_, drupal6_  போன்று ஏதாவது வகையில் கொடுக்கலாம்,   அப்போது எல்லா அட்டவணைகளும் இந்த பெயர் முன்னொட்டாக ஆரம்பித்து உருவாக்கப்படும். அதாவது users என்பது அட்டவணை பெயர் எனில் முன்னொட்டு drupal6_ என்பதை சேர்த்து drupal6_users என உருவாக்கப்படும். இதனால் எத்தனை ட்ரூபாலையும் ஒரே தரவு தளத்தில் நிறுவ முடியும். சரியாக தெரியவில்லை எனில் நீங்கள் இதை எதுவும் செய்யாமல் அவ்வாறே விட்டுவிடலாம்.


 இப்போது Save and Continue கொடுக்கவும்.



 நிறுவுதல் தொடங்கிவிட்டால் அடுத்தப்பத்திக்கு தாவி விடலாம்.
 சில நேரங்களில் தகவல்களில் தவறு இருப்பின் பிழைச் செய்தி காண்பிக்கும். முதலில் நீங்கள் settigns.php கோப்பை உருவாக்கவில்லை என்றாலும் பிழை கூறும்.

Settings.php ல் தரவு தள அமைவுகளை கொடுத்தல்:

 சில சமயங்களில்  தரவு தள தகவல்களில் பிழை இல்லாவிட்டாலும் எந்த பிழைசெய்தியும் காட்டாது எத்தனை தடவை தரவு தள விபரங்களை தட்டச்சி Save  கொடுத்தாலும் மறுபடி அதே பக்கதில் எந்த பிழையையும் சொல்லாது நின்று கொண்டிருக்கும் (சில கணினிகளைப்பொறுத்து இவ்வாறு வரலாம்), இவ்வாறான இக்கட்டான நேரத்தில் நாமாகவே தரவுதள விபரங்களை அமைவுகள் கோப்பிலேயே நேரடியாக சேமிக்க வேண்டி வரும்.

 அதற்கு, தரையிரக்கப்பட ட்ரூபால் அடைவில் நாம் உருவாக்கிய sites/default/settings.php என்ற கோப்பை  திறக்கவும். (PHP கோப்பு சாதாரண எழுத்துவகை (text) கோப்பு ஆதலால் மாற்றம் செய்வதற்கு நோட்பேட் (notepad) மென்பொருளே போதுமானது. Dreamweaver, PHPEditor, Eclips, Netbeans போன்ற நிரலாக்க மென்பொருள் இருந்தால் அதில் திறந்து மாற்றம் செய்யலாம். அல்லது notepad++ எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். )


 திறந்து கொண்ட பின் 92 ஆவது வரியில்

 ================================
 * Database URL format:
  *   $db_url = 'mysql://username:password@localhost/databasename';
  *   $db_url = 'mysqli://username:password@localhost/databasename';
  *   $db_url = 'pgsql://username:password@localhost/databasename';
  */
 $db_url = 'mysqli://username:password@localhost/databasename';
 $db_prefix = '';
 ================================

 என்ற நிரல் வரும் இடத்திற்கு வரவும். அதில் தரவு தள விபரங்களை கொடுக்க வேண்டும். அதன் அமைவானது,


 $db_url = 'mysqli://பயனர்:கடவுச்சொல்@கணினி/தரவுதளபெயர்';

 என்று இருக்கும்.

 நமது தகவல்கள்
 ==============
 பயனர் : root
 கடவுச்சொல் : எதுவும் இல்லை
 கணினி : localhost
 தரவுதள பெயர் : drupal6
 ==============

 எனவே


 $db_url = 'mysqli://root@localhost/drupal6';

 என்று மாற்றவும். இதில் உங்களது தகவல்கள் வேறுபடின் அதற்கேற்ற வகையில் மாற்றி சேமித்துக்கொள்ளவும். இப்போது மீண்டும் உலவியில் நிறுவுதலை தொடங்கினால் சரியாக நிறுவிவிடும்.


 நிறுவுதல் முடிந்ததும் அடுத்து தள அமைவுகள் (Site Configuration ) பக்கம் வரும்.


 அதில் உங்கள் தளத்தின் பெயர் உதாரணமாக தமிழ் நண்பர்கள், தளத்தின் மின்னஞ்சல் முகவரி, தள மேலாளர் பயனர் பெயர் (உதாரணமாக admin), தள மேலாளர் கடவுச்சொல் முதலியவை கேட்கப்படும். இவற்றை தைரியமாக கொடுக்கவும்.



 [ Check update status என்ற தெரிவை எடுத்து விடலாம். ]

 சேமித்துக்கொள்ளவும்.


 இப்போது நிறுவுதல் இனிதே முடிந்தது என ட்ரூபால் உங்களுக்கு தகவல் தரும்.  நீங்களும் தளத்திற்குள் நுழைந்திருப்பீர்கள்.


 இப்போது கொடுத்த பயனர் விபரங்கள்தான் தளத்தின் நிர்வாகி, அதாவது நீங்கள். உங்களுக்கு தளத்தின் எல்லாவித அமைவுகளையும் மாற்ற உரிமை உண்டு. (இதன் User ID : 1)

தளத்தின் முதல் பக்கம்:

 தளத்தில் எந்த பக்கங்களும் இதுவரை முதற்பக்கத்திற்கு ஏற்றப்படவில்லை எனில் ட்ரூபாலின் முதல் பக்கம் இயல்பாக நிர்வாகிக்கு சில தகவல்களை தெரிவித்துக்கொண்டிருக்கும்.




 இப்போது நம் முதல் பக்கத்தை உருவாக்கலாம்.
 அதே பக்கத்தில் இருக்கும் பட்டியலில் create content என்று இருக்கும். அதில் சொடுக்கி அதில் Page என்பதை தெரிவு செய்தால் பக்கம் உருவாக்கும் படிவம் வரும். அதில பக்கத்தின் தலைப்பு. பக்கத்தின் உள்ளடக்கம் விபரம் (Body) போன்றவை கொடுக்கவும்.




 Menu settings என்பதை சொடுக்கி அப்பக்கத்திற்கான பட்டியலின் தொடர்பி தலைப்பை (menu link title) கொடுக்கலாம்.


 முதல் பக்கத்தில் ஏற்ற publishing options என்ற பகுதியில் Promote to Front page என்பதை தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும்.

 நாம் உருவாக்கிய பக்கம் காட்சியளிக்கும். நாம் பட்டியல் அமைவை (Menu settigns) கொடுத்ததால் மேலே வலது பக்க மூலையில் அந்த தொடர்பி வந்திருக்கும். அதை சொடுக்கினாலும் இதே பக்கத்திற்கு வர முடியும். மேலும் நாம் இதை முதற்பக்கத்திற்கு ஏற்றியதால் இதே பக்கம் முதற்பக்கத்திலும் காட்சியளிக்கும்.



 முதற்பக்கத்திற்குச் செல்ல தளத்தின் முத்திரை (Logo)  பகுதியில் இருக்கும் தலைப்பை சொடுக்கினால் போதும். முதல் பக்கத்தில் இவ்வாறு பதிந்து முதற்பக்கத்திற்கு ஏற்றப்பட்ட அனைத்து பக்கங்களும் பதிந்த வரிசைப்படி தெரியவரும்.


 இப்போது உருவாக்கிய பக்கம் ஒரு node எனப்படும். இது ஒரு கோப்பாக இல்லாமல் தரவு தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
 இப்பக்கத்தின் முகவரி ?q=node/1 என்று இருக்கும். மற்றொரு பக்கத்தை உருவாக்கினால் அதன் முகவரி ?q=node/2 என்று வரிசையாக இருக்கும்.

 மற்ற உள்ளடக்க மேலாண்மை மென்பொருட்களைப்போல முதல் பார்வையிலேயே எல்லா வசதிகளையும் தராமல் இருப்பதால் முதலில் பார்க்க ட்ரூபால் எளிமையாகவும் அதே சமயம் புரிந்து கொள்ள கடினமாகவும் உங்கள் பார்வைக்கு இருக்கலாம்.
 ஏனெனில் ட்ரூபால் பொதுவான பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. ஒரே தேவையை பூர்த்தி செய்ய பல வழிமுறைகள் உண்டு. ஒவ்வொருவரின் தேவையும் ஒவ்வொருவிதமாக இருப்பதால் அவரவர் தேவைக்கு ஏற்றபடி ஒவ்வொரு வசதியாக நாம் செயல்படுத்த முடியும். உதாரணமாக முதற்பக்கத்தை நமக்குத் தேவைப்படி மாற்றுதல், தளத்தின் நிறத்தை, வடிவத்தை மாற்றுதல், பக்கங்களில் படங்கள் சேர்த்தல், வகைவகையான எழுத்துக்களை அமைத்தல், கோப்புகளை மேலேற்றுதல், தொடர்பு படிவம், பயனாளர்களின் அமைவுகள், வலைப்பூ, விவாதமன்றம் போன்று எல்லா வசதிகளையும் எவ்வாறு செய்வது என ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் காணலாம்.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply